கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ‘ஸ்ரீ ராஜா’ என்னும் உணவகத்தில் நேற்றிரவு (ஏப்.11) வெளியூர் பயணிகள், பெண்கள், கடையின் ஊழியர்கள் என சிலர் உணவருந்திக்கொண்டிருந்தனர்.
அப்போது சுமார் இரவு 10 மணியளவில் அங்கு வந்த சி1- காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து, சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் மீது லத்தியைக் கொண்டு தாக்குதல் நடத்தினார்.
இதில், ஓசூரைச் சேர்ந்த பெண் உள்பட மூன்று பேர் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உதவி ஆணையர் தலைமையில் குழு அமைத்து மாநகர காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
![விசாரணை நடத்திய மாநில மனித உரிமைகள் ஆணையம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-eateriesassaultedbypolice-script-7204624_12042021145835_1204f_1618219715_483.jpeg)
இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன், இது குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்கும்படி கோவை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: வாடிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர்