கோவை மாவட்டம் அருகே கிணத்துக்கடவு, நெகமம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளிலுள்ள கிணற்றில் குடிநீர் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இயங்கும் தென்னை நார் தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் கழிவால்தான், குடிநீர் மாசடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து 10 நாட்களுக்கு முன்பு, கோவை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமலே இருந்துள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் புகாராளிப்பதற்காக அப்பகுதி மக்கள் கிணற்றிலுள்ள மாசடைந்த குடிநீரை எடுத்துக்கொண்டு வந்தனர். உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் குறைதீர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பகுதி மக்கள், "தென்னை நார் தயாரிக்கும் தொழிற்சாலை கழிவினால் நிலத்தடி நீர் பெருமளவில் மாசடைந்துள்ளது. கடந்த வாரம் கோவை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தோம். அவரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பித்தார். ஆனால், இதுவரை அரசு அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மாசடைந்த நீரால் தோல் நோய், முடி உதிர்தல் போன்ற நோய் பாதிப்பு எற்பட வாய்ப்புள்ளது. மேலும், அரசு வடிகால் வாரியமே இந்த நீரை குடிக்க உகந்தது அல்ல என்று தெரிவித்துள்ள காரணத்தினால், அரசு அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேண்டுகொள் விடுத்தனர்.
இதையும் படிங்க: மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மெட்ரோ ரயில் பயணம்!