DMK protest against seeman: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய மறுக்கும் ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சீமானுக்கு எதிராக திரண்ட திமுகவினர்
இதனிடையே நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த வந்த இடத்தில், சீமானுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து காவல் துறையினர் திமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு கூறினார். திமுகவினர் ஏற்க மறுத்ததால், காவல் துறையினர் கைது செய்ய முயன்றனர்.
அப்போது திமுகவினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டம் நடத்திய திமுகவினர் 15 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது, "சிறையில் வாடும் இஸ்லாமியர்களை விடுவிக்கக் கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றோம்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்கின்றனர். ஆனால், ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகள், இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க மறுக்கின்றனர்.
இஸ்லாமியர் என மதத்தைப் பார்க்காமல் மனிதம் பார்க்க வேண்டும். அண்ணா பிறந்தநாளில் விடுவிக்கப்பட்ட 700 சிறைக்கைதிகளில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை. இதுகுறித்து குழு அமைக்கப்போவதாக தமிழ்நாடு அரசு சொல்கின்றது.
மக்களின் உணர்வு விடுதலை தான். இதில் குழு என்பது தேவையற்றது. மதம் பார்க்காமல் மனிதம் பார்க்க வேண்டும்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது 7 தமிழர் விடுதலை குறித்து பேசுகின்றனர். இப்போது திமுகவினர் பேச மாட்டார்கள். இஸ்லாமியக் கைதிகளை விடுவிக்க வாய்ப்புத்தாருங்கள் எனக்கேட்டதால் திமுகவிற்கு இஸ்லாமியர்கள் வாக்கு செலுத்தினர்.
மனிதநேய அடிப்படையில், கருணை அடிப்படையில் இஸ்லாமியக் கைதிகளை விடுவிக்க வேண்டும்.
திமுகவினர் எதிர்ப்புத்தெரிவித்துப் போராடுவதில் பெருமைதான். அந்த அளவிற்கு பெரிய ஆளாகி இருக்கின்றோம். அரசியலில் இதெல்லாம் சாதாரணம். தரக்குறைவு பேச்சு என்பதை திமுக பேசக்கூடாது.
அரசுக்கு எதிராக பேசக் கூடாது என்பது நல்ல ஜனநாயகம் அல்ல. பாஜக இதைத் தான் செய்கின்றது. அதையே திமுகவும் செய்கின்றது. அரசுக்கு எதிராகப் பேச வேண்டும் என்பது மனநோய் அல்ல. அரசு சரியாக இருந்தால் பேசப்போவதில்லை" என்றார்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்து கேட்டதற்கு தேடி கண்டுபிடிக்கட்டும் என சீமான் நக்கலாகப் பதில் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Merit: விவசாயி மகளுக்கு ரூ.3 கோடி உதவித்தொகை: சிகாகோ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு