கோயம்புத்தூர்: காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் மலையகத் தாயகம் திரும்பிய தமிழருக்கான இயக்கம் சார்பில் 'மலையகம் 200' என்ற தலைப்பில் பன்னாட்டு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா, இலங்கை தமிழர் நல ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவர் கலாநிதி வீராசாமி, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் மற்றூம் இலங்கைத் தமிழர்கள் இதில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எம்பி ஆ.ராசா, "மலையகத்தமிழர்கள் இயக்கத்தின் சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளதாக தெரிவித்தார். 1983க்கு பிறகு ஈழத்தில் இருந்து வந்த தமிழர்களில் மலையகத் தமிழர்களும் அடங்குவார்கள்.
மலையகத் தமிழர்களுக்கு இன்னும் என்னென்ன உரிமைகள் வழங்கப்படவில்லை, அதற்கு முன்பு இங்கு வந்து நீலகிரி போன்ற மலைப்பகுதிகளில் வசிக்கின்ற மக்களுக்கு நிலப்பட்டா உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் என்னென்ன செய்யப்பட வேண்டும் என்று ஆய்வு செய்து, அதற்கான அறிக்கையை தர வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் குழு ஒன்றை அமைத்திருந்ததாக கூறிய அவர், அந்த குழு இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிக்கையை அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "அந்த அறிக்கையின் அடிப்படையில் முகாமில் இருக்கக்கூடிய மலையகத் தமிழர்கள் எத்தனை பேருக்கு குடியுரிமை வழங்கப்படாமல் உள்ளது என்பதை அட்டவணைப்படுத்தி உள்ளனர். அதே போல் இலங்கையிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இலங்கை அரசின் சார்பில் ஒரு அறிக்கையை தயார் செய்து, அந்த இரண்டு அறிக்கையையும் ஒப்பீடு செய்கின்றபோது ஏறத்தாழ ஒரே மாதிரியான எண்ணிக்கையில் ஆய்வறிக்கைகள் அதில் இடம்பெற்றுள்ளது.
அதன்படி நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அந்த மக்களை தொடர்பு கொண்டு அவர்களது பிரச்சனைகளை முதலமைச்சருடன் இணைந்து பேசி உரிய தீர்வு காண்பதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன்”என தெரிவித்தார். மேலும் இந்த குழுவை அமைத்த முதலமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தார்.
சிறுபான்மை இன மக்களுக்கு அதிமுக தான் ஆதரவாக உள்ளது என எடப்பாடி பழனிச்சாமி பாஜகவில் இருந்து விலகிய பின்பு தற்பொழுது தெரிவித்தது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், பாஜகவில் இருந்து விலகிய பின் திடீரென ஞானோதயம் வந்திருக்கிறது எனவும் அது எத்தனை நாட்கள் இருக்கிறது என்று பார்ப்போம் எனவும் தெரிவித்தார். மேலும் என்னுடைய நேர்மை பற்றி பேச அண்ணாமலைக்கோ, எல்.முருகனுக்கோ அருகதை இல்லை எனவும் காட்டமாக கூறினார்.