கோயம்புத்தூரில் கடந்த 23.07.2018 அன்று , நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிப் பகுதியில் இருக்கும் குடியிருப்புகளுக்கு சொத்து வரியை 50 விழுக்காடும், வாடகை குடியிருப்புக் கட்டடங்களுக்கு 100 விழுக்காடும் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம் தற்போது அதனை அமல்படுத்தியுள்ளது. கடந்த எட்டு ஆண்டு காலமாக பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர மாநகராட்சி நிர்வாகம் மறுக்ப்பதாக கூறப்படுகிறது.
மேலும், குப்பைகள் சரிவர எடுக்காமல் மலை போல் குவிந்து கிடப்பதாகவும் பல பகுதிகளில் மாதத்திற்கு ஒரு முறைதான் குடிநீர் வழங்கப்படுவதாகவும் தெரிகிறது.
அதுமட்டுமின்றி, சாக்கடைகள் தூர்வாரப்படுவதில்லை, புதிய மழைநீர் வடிகால் அமைக்கப்படவில்லை, பாதாள சாக்கடை கட்டுமான பணிகள் கடந்த எட்டு ஆண்டு காலமாக முடிக்கப்படாமல் உள்ளது, பல பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது, தெருவிளக்குகள் எரியாமல் பல்வேறு நகர்கள் இருளில் மூழ்கி கிடக்கின்றன என பொதுமக்களும், எதிர்க்கட்சியினரும் அடுக்கடுக்காக குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், கோயம்புத்தூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் பயன்படுத்துகின்ற கட்டடங்களுக்கு நூறு விழுக்காடு வரிஉயர்வு செய்த அரசை கண்டித்தும், மேலும் "சூயஸ்" எனும் வெளிநாட்டு நிறுவனத்தோடு 26 ஆண்டு காலம் போடப்பட்ட குடிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எம்.எல்.ஏ. கார்த்திக் தலைமை தாங்கினார்.