தமிழ்நாட்டில் 40 நாள்களுக்குப் பிறகு நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் மற்றும் சென்னை மாநகர காவல் எல்லைக்குள் வரும் பகுதிகள் தவிர பிற பகுதிகளில் இயங்கி வரும் அரசு மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதறக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக்கும், திமுக தொண்டர்களும் முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளி கடைப்பிடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிமுக அரசையும், மத்திய பாஜக அரசையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், “பரவிவரும் கரோனா வைரசிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு பதிலாக, மதுக் கடைகள் திறப்பது கண்டனத்திற்குரியது. பொதுமக்கள் வேலை இல்லாமல் தவித்து வரும் சூழலில், டாஸ்மாக் கடைகளைத் திறப்பது வேதனையளிக்கிறது. தொழிற்சாலைகள், நிறுவனங்கள் திறந்து மக்களுக்கு வேலை வாய்ப்பினை அதிகப்படுத்துவது தான் தற்போது உள்ள சூழலில் சரியானது. ஆனால் அதற்கு அனுமதி அளிக்காமல், டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து கூட்டம் கூடும் படி செய்வது மிகவும் கண்டனத்திற்குரியது” என்று பேசியுள்ளார்.
இதையும் படிங்க: கோவையில் முதல் ஆளாக மது வாங்கி சென்ற ஸ்பெயின் நாட்டவர்!