கோயம்புத்தூர்: ஈச்சனாரியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியின் மேடை அமைக்கும் பணியை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச்சந்தித்த அவர், “முதலமைச்சர் 23ஆம் தேதி கோவை வருகை தரவுள்ளார். 24ஆம் தேதி ஈச்சனாரி பகுதியில் நடைபெற உள்ள பிரமாண்டமான விழாவில், ஒரு லட்சத்து 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார்.
இந்தியாவிலேயே ஒரே மேடையில் இத்தனை பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது இந்த மேடையில் தான். மின்சார வாரியம் மூலம் மத்திய அரசுக்கு 70 கோடி ரூபாய் நிலுவைத்தொகை செலுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அனுமதி பெற்று, மின்சார வாரியம் மூலம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, போர்ட்டலில் சரிபார்க்கும் வசதியையும், செலுத்தக் கூடிய தொகைக்கு சரிவர கணக்கு வைத்துகொள்ளும் வசதியையும் ஏற்படுத்த வலியுறுத்தப்படும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாம் 70 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு மத்திய அரசு தடை போடுகிறது. ஆனால், அவர்கள் பல்வேறு துறைக்கு வழங்கக்கூடிய நிலுவைத்தொகைகளை காலம்தாழ்த்தி கொடுக்கிறார்கள். அதை நாம் எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. இதனை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகத் தான் பார்க்க முடியும்.
மின்சார சட்டத்திருத்த மசோதாவிற்கு அனைவரும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களிலும் எதிர்ப்பு இருக்கிறது. இது என்ன அரசியல் கபட நாடகமா” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார்.
மேலும்,'' மத்திய அரசு ஒரே நிலைப்பாட்டில் செயல்பட வேண்டும். அண்ணாமலை வேலை வெட்டி இல்லாத ஒரு நபர். நான் கேட்ட கேள்விக்கு இதுவரை எந்தப் பதிலும் அவர் சொல்லவில்லை. நான் கேட்ட கேள்விக்கு அவர் பதில் கொடுக்கவில்லை என்றால், இனிமேல் அவர் பற்றி கேள்வி கேட்பதைக் தவிர்த்து விடலாம்.
அண்ணாமலை சொல்வதைப் புரிந்து கொள்ள வேண்டும் அல்லது புரிந்து கொள்கிற பக்குவம் இருக்க வேண்டும். இல்லையென்றால் தெரிந்துகொள்ள வேண்டும். இரண்டும் இல்லையென்றால் அவர் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என்றார்.
சென்னை பெரும்பாக்கத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மின் கட்டணம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, “இரண்டு வருடம் சலுகைகளை அனுபவித்துக்கொண்டு அப்போதெல்லாம் மின் கட்டணம் செலுத்தாமல், இப்போது சொன்னால் அது ஏற்றுக்கொள்ளமுடியாது. கடந்த கால அரசு செய்த தவற்றை, நாம் தொடர முடியாது.
மிகுந்த கடனில் தவித்துக் கொண்டிருக்கின்ற மின்சார வாரியத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி, மின்சார வாரியத்தை சரிவர முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வருகிறார். கோவையில் வருகின்ற 24ஆம் தேதி முதலமைச்சர் கலந்து கொள்ளும் பொதுகூட்டத்தின் மேடையில் யார் இருக்கிறார், கீழே யார் இருக்கிறார் என்று நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்” என மாற்றுக் கட்சியிலிருந்து முக்கிய நபர்கள் இணைவது குறித்த கேள்விக்கு செந்தில் பாலாஜி பதிலளித்தார்.
இதையும் படிங்க: ஐந்தரை அறிவு கொண்ட எடப்பாடி பழனிசாமி சிறை செல்வது உறுதி... ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி