கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்.19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில், கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி போட்டியிடுவது குறித்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒன்பது இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், எந்தெந்த இடங்களில் போட்டியிட உள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.
இதற்கிடையே கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ள 89ஆவது வார்டு காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அக்கட்சியை சேர்ந்தவர்கள் அப்பகுதி திமுகவினரிடம் ஆதரவு கோரியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அப்பகுதி திமுகவினர் 89ஆவது வார்டை காங்கிரஸிற்கு ஒதுக்கக் கூடாது எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குனியமுத்தூர் பேரூராட்சியாக இருந்த போது, திமுக-காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களில் வென்றிருந்தது. நான்கு இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றிருந்தது.
அப்பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், அதனால் 89ஆவது வார்டை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கக்கூடாது எனவும் கூறினர்.
தொகுதி அறிவிக்கும் முன்பாகவே கோவையில் திமுக கூட்டணியில் முரண்பாடு ஏற்பட்டு, ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது அக்கூட்டணி கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தளபதி பாதையில் தம்பிகள் - சைக்கிளில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த விஜய் மக்கள் இயக்கத்தினர்