குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்தும் அதற்கு ஆதரவளித்த மாநில அரசைக் கண்டித்தும் கோவை மாவட்டம், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு புறநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தெற்கு இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன், "மத்திய அரசின் குடிமையுரிமை சட்டத் திருத்த மசோதாவானது சிறுபான்மை மக்களுக்கு மிகப்பெரிய அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கைத் தமிழர்கள் ஏற்கெனவே இலங்கை அரசால் கைவிடப்பட்டார்கள்.
நமது நாட்டிலுள்ள இலங்கைத் தமிழர்களை நாம் கைவிட வேண்டிய நிலைமை உருவாகும். இதனால் சிறுபான்மை மக்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் பாதுகாப்பு இருக்காது. எனவே இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்" என்றார். அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 50க்கும் மேற்பட்டோரையும் காவல் துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.
இதையும் படிங்க: நல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்!