தமிழ்நாட்டில் வரவுள்ள 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்மரமாக ஈடுபட்டுவருகின்றன. மாநில எதிர்க்கட்சியான திமுக தங்களுடைய நிலைப்பாட்டை மக்களிடம் கொண்டு செல்ல பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், கோவை அவினாசியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில், திமுக மாநில பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் தேர்தல் அறிக்கை பணிக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி சிவா, திமுக துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ், செய்தி தொடர்பாளர் இளங்கோவன் ஆகியோரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தக் கூட்டம் கோவை, நீலகிரி ஆகிய ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் நடைபெறுகிறது.
இதில் கட்சி உறுப்பினர்கள் தவிர பொதுமக்கள், தொழில்முனைவோர், சமூக ஆர்வலர்கள், மற்றும் பல்வேறு துறை நிறுவனர்களை சந்தித்து கருத்து கேட்கப்படவுள்ளது. இதை மனுவாகப் பெற்று தேர்தல் அறிக்கையாக வெளியிட திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.
இன்று காலை 10:30 மணி முதல் கோவை கிழக்கு மாநகர், கோவை மேற்கு மாநகர் மாவட்டங்களை சேர்ந்த திமுக மாவட்ட நிர்வாகிகள், திமுக கழக நிர்வாகிகள், திமுக கழக முன்னணி நிர்வாகிகள் ஆகியோர் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டிய கருத்துக்களை டி.ஆர்.பாலுவிடம் வழங்க உள்ளனர். அதனைத் தொடர்ந்து மதியம் 12 மணி அளவில் நீலகிரி மாவட்ட செயலாளர் முபாரக் மற்றும் கழக நிர்வாகிகள் டி.ஆர்.பாலுவை சந்திக்கவுள்ளனர்.