கோவை : பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உச்சத்தை தொட்டு உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. பெட்ரோல் ரூ. 92.90 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 86.31 ஆகவும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.719 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட கட்சியினருக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, இன்று (பிப்.26) மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தவகையில், கோவையை அடுத்த அன்னூர் பகுதியில் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைக்க வலியுறுத்தி மாட்டுவண்டி, சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.
அன்னூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் கணேசபுரத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி கடத்தூர், முதலிபாளையம் ஆகிய பகுதிகளில் பயணப்பட்டு, பின்னர் மீண்டும் கணேசபுரத்தை அடைந்து, நிறைவடைந்தது.
முன்னதாக, பெண்கள் காலி சிலிண்டர்களுடனும், விறகு அடுப்பில் சமையல் செய்து போலவும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க : எம்ஜிஆர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இதுதான் முதல்முறை: தடம்பதிக்கும் மோடி!