கோயம்புத்தூர் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு, 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் அவ்வப்போது உரிய அனுமதியின்றி அன்னிய நபர்கள், வாகனங்கள் உள்ளே வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில்,"நேற்று (ஏப். 16) உரிய அனுமதி பெறாமல் இரண்டு கார்கள் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள கல்லூரி வளாகத்திற்குள் வந்துள்ளது. கல்லூரி வளாகத்தில் நுழைய மூன்று வழிகள் உள்ள நிலையில், முக்கிய பிரதான வழியில் மட்டுமே காவல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மற்ற பகுதியில் பாதுகாப்பு இல்லாத சூழலில் அன்னிய நபர்கள் உள்ளே வரலாம், அதனை தடுக்க அங்கு பாதுகாப்பு போடப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினரும் தொகுதி வேட்பாளருமான கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தற்போது அடிக்கடி அன்னிய நபர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு வருகின்றனர்.
அங்கு பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்கப்படவில்லை. காவல்துறை பாதுகாப்பு போதுமானதாக இல்லை. சிசிடிவி கேமராக்கள் அவ்வப்போது வேலை செய்யாததால் அதற்கான யுபிஎஸ் நிறுவப்பட வேண்டும். முறையான அடையாள அட்டை இல்லாதவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிபிஎஸ்ஐ பொதுத் தேர்வு ஒத்திவைப்பு - கல்வியாளர்கள் வரவேற்பு!