திமுகவினரின் கட்சி பொதுக்கூட்டங்கள், கிராம சபை கூட்டம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவற்றிற்கு கோயம்புத்தூர் மாவட்ட காவல் துறையினர் தொடர்ந்து அனுமதி மறுத்துவருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (டிச.29) திமுக சார்பில் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகையிடப்படும் என்று மாவட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக் கூறியிருந்தார்.
இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக இன்று காலை முதல் கோயம்புத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் காவல் துறையினர் திமுகவினரை கைது செய்யும் முயற்சியை மேற்கொண்டனர்.
தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக் திட்டமிட்டபடி மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகையிடப்படும் என்றார்.
பின்னர் அண்ணா சிலை வழியாக காரில் வந்த சட்டப்பேரவை உறுப்பினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர் அண்ணா சிலையில் இருந்து மாவட்ட காவல் ஆணையர் அலுவலகம் நோக்கி நடந்துவந்தார். அவரை சுற்றிலும் திமுகவினர் இணைந்து காவல் துறையினரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வந்த 500க்கும் மேற்பட்ட திமுகவினரை காவல் துறையினர் தடுப்புகளை வைத்து நிறுத்தினர். அதை தள்ளிவிட்டு திமுகவினர் மாவட்ட காவல் ஆணையர் அலுவலகம் நோக்கி சென்றனர். உடனே காவல் துறையினர் அனைவரையும் கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றி சென்றனர்.
இதையும் படிங்க: தடையை மீறி நடத்தவிருந்த மக்கள் சபைக்கூட்டம்; 300க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது