கோவை மாவட்டம் சூலூர் வட்டத்திலுள்ள வாரப்பட்டி ஊராட்சியில் வேளாண் நிலத்தில் சிப்காட் அமைக்க அப்பகுதி உழவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். இதற்காகப் போராட்டம் நடத்த சிப்காட் எதிர்ப்புப் போராட்டக் குழு தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டக் குழுவிற்கு, திரைப்பட இயக்குநரும் தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச்செயலாளருமான கௌதமன் ஆதரவு தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு அரசின் நிறுவனமான சிப்காட் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 15ஆவது திட்டமாக சூலூர் வட்டம் வாரப்பட்டி பகுதியில் 421.41 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய சிப்காட் தொழில்முனையம் அமைக்க உள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக வாரப்பட்டி, கந்தம்பாளையம், கடையஞ்செட்டிபாளையம், சந்தராபுரம் கிராமங்களில் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இப்பகுதி வேளாண் நிலம் அதிகமாக உள்ள பகுதி. மேலும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்கால் இந்தக் கிராமங்களின் ஓரம் செல்வதால் தண்ணீர்ப் பிரச்சினையின்றி செழிப்பான வேளாண்மை நடைபெற்றுவருகின்றது. இதனால் சிப்காட் நிறுவனம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் பல்வேறு மனுக்களைத் தமிழ்நாடு அரசிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் வழங்கியுள்ளனர்.
தற்போது சிப்காட் தொழில்முனையத்திற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து இயக்குநர் கௌதமன் அந்தப் பகுதியைப் பார்வையிட நேற்று (பிப். 3) சந்திராபுரம் வந்தார். அப்போது சுல்தான்பேட்டை காவல் துறையினர், காவல் துணைக் கண்காணிப்பாளர் சூரியமூர்த்தி தலைமையிலான காவலர்கள் இயக்குநர் கௌதமனைத் தடுத்து நிறுத்தி, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் மக்களைச் சந்திக்க மாட்டேன் என்று கௌதமன் உறுதிமொழி அளித்ததைத் தொடர்ந்து, அவர் சிப்காட் அமைய உள்ள பகுதியைப் பார்வையிட அனுமதித்தனர்.
அப்போது செய்தியாளரிடம் பேசிய கௌதமன், “பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய சிப்காட் அமைப்பதற்குத் தமிழ்நாடு அரசு உறுதுணையாகச் செயல்பட்டுவருகிறது. இதனைப் பார்வையிடச் சென்ற என்னை காவல் துறையைக் கொண்டு அடக்குமுறை செய்துள்ளது. பொதுமக்களைச் சந்திக்க வேண்டாம் என்று கூறியுள்ளது.
இதுபோன்ற அடக்குமுறைகள் தமிழ்நாடு அரசுக்கு எந்தவித நற்பெயரையும் ஏற்படுத்திவிடாது. சட்டப்பேரவையில் சிப்காட் அமைக்க வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு கூற முடியுமா? சிப்காட் திட்டத்தை நிறுத்தும்வரை போராட்டமானது தொடரும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குளத்தில் குளிக்க சென்ற இளைஞர் சடலமாக மீட்பு!