கோயம்புத்தூர்: அன்னூர் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் நிறுத்தப்படும் பேருந்துகளில் இருந்து டீசல் திருடப்பட்டு வருவது குறித்து உயர் அலுவலர்களுக்குத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளன. கடந்த ஒருவார காலமாக அன்னூர் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் இரவு நேரங்களில் நிறுத்தப்படும் பேருந்துகளை தீவிரமாக அலுவலர்கள் கண்காணித்து வந்தனர்.
அரசுப் பேருந்தில் டீசல் திருட்டு
இந்நிலையில் பேருந்துகளின் டீசல் டேங்கில் இருந்து டியூப் மூலம் டீசல் திருடிய சம்பந்தப்பட்ட நபரை அலுவலர்கள் கையும் களவுமாகப் பிடித்தனர். விசாரணையில், திருடியவரின் பெயர் பெரியசாமி என்பதும், அவர் அதே பணிமனையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
ஓட்டுநர் சஸ்பெண்ட்
பின்னர் அவரிடமிருந்து 20 லிட்டர் டீசல் கேன்கள் மற்றும் அதற்குத் தேவையான டியூப்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து டீசல் திருடிய பெரியசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: குமரி சட்டக்கல்லூரி மாணவர் படுகொலை: நெல்லையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டதால் பரபரப்பு