கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள வெள்ளமடை பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் சிவனடியாரான சாமியார் ராமசாமி ஜீவ சமாதி அடைந்ததாக கூறப்படுகிறது.
90 வயது நிரம்பிய இவர் தனது தள்ளாத வயதிலும் மலை அடிவாரத்திலுள்ள பேரூர், ஒத்தகால்மண்டபம், மருதமலை ஆகிய பகுதிகளில் உள்ள மடங்களில் தங்கியுள்ளார்.
மேலும் பாதயாத்திரையாக பழனி மலைக்கு சென்று அங்குள்ள மடங்களில் தங்கி முருகப்பெருமானை வழிபட்டு வந்துள்ளார்.
இவர் பாத யாத்திரையை மேற்கொண்டு வரும் வழிகளில் உள்ள பல்வேறு மடங்களில் தங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்துள்ளார்.
பாதயாத்திரை மற்றும் மடங்களில் தங்கியிருந்தபோது அவருக்கு அடியார்களின் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் மடங்களில் தங்கி இருந்த சாமியார் ராமசாமி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார். உடனே அவரது பக்தர்கள் அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மூன்று நாள்கள் சிகிச்சை பெற்ற பின்னர் அவரை கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மடத்தில் தங்கவைத்து கவனித்து வந்தனர்.
இந்நிலையில், 15 நாள்களுக்குப் பின்னர் அவர் இறந்து விட்டதாக தெரிகிறது. உடனிருந்த அடியார்கள் அவரது உடலை கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளைமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்திற்கு கொண்டு வந்து சமாதி அமைத்து, அமர்ந்த நிலையில் புதைத்து விட்டதாக தெரிகிறது.
மேலும் அடியார்கள் அவருக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்த இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சாமியார் ஜீவ சமாதி அடைந்து விட்டதாக ஒரு தகவல் காட்டுத் தீ போல் பரவியது.
இதனையடுத்து வெள்ளமடை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து சமாதியை வணங்கி செல்கின்றனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாமியார் ஜீவ சமாதி அடைந்தாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் முழு விசாரணைக்கு பின்னரே சாமியார் ஜீவசமாதி அடைந்தாரா என்பது முழுமையாக தெரியவரும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புரட்டாசியிலும் ஜெட் வேகத்தில் ஏறும் கறிக்கோழி விலை !