கோவை:கோவையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வெள்ளிக்கிழமை(டிச. 17), தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு கோவை வந்தார்.
பின்னர் இரவு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சென்றார்.
செல்லும் வழியில் திடீர் ஆய்வு
சத்தியமங்கலம் செல்லும் போது திடீரென அன்னூர் அருகே உள்ள கோவில்பாளையம் காவல் நிலையத்திற்குள் சென்று ஆய்வு மேற்கொண்டார். காவல் ஆய்வாளர் சிவக்குமார், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், டிஜிபியை வரவேற்றனர்.
பின்னர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யவும் குற்றச் சம்பவங்கள் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு சம்பவங்கள் நடக்காமல் தடுக்க ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
மேலும், மனு கொடுக்கக் கூடிய மக்களிடம் கனிவோடு அன்போடு நடக்க வேண்டும் என்றும், காவல் நிலையத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
திடீர் ஆய்வால் பதற்றம் ஆன காவலர்கள்
சைலேந்திரபாபு காவல் நிலைய வளாகத்துக்குள் சென்றபோது, காவலர்கள் அவர்களுடைய பணியை பார்த்துக் கொண்டிருந்தனர்.
திடீரென இவரை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்த காவலர்கள் அவருக்கு மரியாதை செலுத்தியதோடு இதனைச் சக காவலர்களுக்கு தெரிவிக்க தலையில் அடித்துக் கொண்டு ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மேலும் காவலர்கள், குற்றவாளிகளை மிரட்டப் பயன்படுத்தும் பெரிய பைப் துண்டை அவசர அவசரமாக மறைத்து வைப்பதும் இந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி உள்ளது.
இதையும் படிங்க:பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: காவல் ஆய்வாளர் முன்பிணை தள்ளுபடி