கோயம்புத்தூர்: ஆலாந்துறை அடுத்து மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. இதன் மூலவர் 7ஆவது மலையான கிரி மலையின் உச்சியில் உள்ளதால், ஆண்டுதோறும் பிப்ரவரி முதல், மே மாதம் வரை மலையேறப் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
மகா சிவராத்திரி
குறிப்பாக மகாசிவராத்திரியின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக, பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (மார்ச் 1) மகாசிவராத்திரியை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலையேறுவதற்குப் பக்தர்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மலையேறுவதற்கு அனுமதி எனத் தகவல் அறிந்ததும் கோவை மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
உடல் வெப்பநிலை பரிசோதனை
மலையேறுவதற்கு வரும் பக்தர்களுக்கு வனத்துறை சோதனைச்சாவடியில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது.
வனப்பகுதிக்குள் பக்தர்கள் நெகிழி பொருள்களைக் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் கூட்டமாகச் செல்ல வேண்டாம் எனவும்; யாரும் தனியாகச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உக்ரைனில் இந்தியர் பலி: மாணவரின் தந்தைக்கு ஆறுதல் கூறிய பிரதமர்