கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகேயுள்ள, வேட்டைக்காரன்குட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில், திருட முயன்றதாக, கடந்த திங்கள்கிழமை அதிகாலை, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சட்டெ இந்திர பிரசாத்(35) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல் நிலையத்தில் போலிசார் விசாரித்தனர்.
அப்போது மயங்கி விழுந்த அவர், சிறிது நேரத்தில் உயிரிழந்தார். காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, அறிக்கை தர சூலூர் காவல் ஆய்வாளர் முருகேசனுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சூலூர் காவல் ஆய்வாளர் மேற்கண்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே, சூலூர் நீதிமன்ற நீதிபதி, கோவை அரசு மருத்துவமனை, கருமத்தம்பட்டி காவல் நிலையம் ஆகிய இடங்களுக்கு சென்று, இந்த வழக்கு தொடர்பாக இன்று ஆய்வு செய்து விசாரித்தார்.