தமிழ்நாட்டில் மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும், தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகமும், பல்வேறு உயர்மின் அழுத்த மின்பாதை திட்டங்களை செயல்படுத்திவருகின்றன. இத்திட்டங்கள் அனைத்தும் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், உள்ளிட்ட பல மாவட்டங்கள் வழியாக செயல்படுத்தப்பட்டுவருகின்றன.
இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது கொங்கு மண்டல விவசாயிகள்தான். ஏன் என்றால் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த புகலூர் பவர்ஹவுஸில்தான் 200 ஏக்கர் பரப்பளவில் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
குறிப்பாக, புகலூர் - ராய்கர் வரை, புகலூர்- திருவலம் வரை, புகலூர் - மைவாடி வரை, புகலூர் - அரசூர் வரை, புகலூர் - இடையர்பாளையம் வரை, புகலூர் - திருச்சூர் வரை, இடையர்பாளையம் - மைவாடி வரை என பவர்கிரிட் நிறுவனம் தனது பணிகளை தொடங்கியுள்ளது.
இதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். கம்பு, சோளம், ராகி, கரும்பு, திராட்சை, தென்னை, காய்கறி வகைகள் ஆகியவை அதிகளவில் விவசாயம் செய்யபடுகின்றன.
கொங்கு மண்டல விவசாயிகளுக்கு இரண்டு வருடங்களாக ஏற்பட்ட வறட்சி, மத்திய அரசின் கெயில் நிறுவனம் எரிவாயு கொண்டு செல்ல விவசாய நிலங்களில் குழாய் பதித்தல், உரம், விதை விலை உயர்வு வேலை ஆட்கள் கிடைப்பதில் சிரமம் போன்ற பல இன்னல்கள் ஏற்பட்ட நிலையில், கொங்கு மண்டல விவசாயிகளுக்கு தற்போது விவசாய நிலங்கள் வழியாக மின் உயர் மின் கோபுரம் கொண்டு செல்லும் திட்டம் காரணமாக தங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, கருமத்தம்பட்டி பகுதியை சார்ந்த விவசாயி சதீஸ் கூறுகையில், "விவசாய நிலங்களில் அமைந்துள்ள உயர்மின் கோபுரங்களால் சிறு, குறு விவசாயிகளின் விளைநிலம் துண்டாடப்பட்டு, தென்னந்தோப்புகள், மரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டுவருகின்றன. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் வெட்டப்படவுள்ளன.
அதுமட்டுமின்றி, இந்த உயர்மின் கோபுரங்களால் நிலங்களின் மதிப்பு குறைந்துவிடுகிறது. வங்கிகளில் கடன் தர மறுக்கிறார்கள், அளவிற்கு அதிகமான கதிர் வீச்சால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது" என்றார்.
இதற்காக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் உயர்மின் கோபுரத்தின் கீழே ஒருவரை நிற்க வைத்து சோதனை செய்தபோது அவரின் உடலில் மின்சாரம் பாய்வது இண்டிகேட்டர் மூலம் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.