கோவை மாவட்டம், சிங்காநல்லூர் பகுதியில் உள்ள அஸ்தாந்திர நாயக்கர் வீதியில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 70 ஆண்டுகளாக வசித்து வருகின்றன. இங்கு பல ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு வளர்ச்சிப்பணியும் நடைபெறவில்லை எனக்கூறப்படுகிறது. குறிப்பாக நடைபாதை, தடுப்புச்சுவர், சாக்கடை கால்வாய், சாலை சீரமைப்பு உள்ளிட்ட எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை எனத் தெரிகிறது
மக்களின் அடிப்படை வசதியான குடிநீர், மின்சார வசதி எதுவும் செய்துதரவில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே, தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தரவேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'பல ஆண்டுகளாக நாங்கள் மின்சாரமே இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். படிப்பதற்குக் கூட மண்ணெண்ணெய் விளக்கு வைத்து படித்து வருகிறோம். இதனால் படிப்பதற்கு மிகவும் சிரமாக உள்ளது. மழைக்காலங்களில் மின்சாரம் இல்லாமல் இரவு நேரங்களில், கொசுக்களால் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறோம். விரைவில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றனர்.
தேர்தல் நேரத்தில் மட்டும் ஒவ்வொரு முறையும் அனைத்து செய்து தருகிறோம் எனக் கூறிவிட்டு, தேர்தல் முடிந்ததும் எதுவும் கண்டுகொள்வதில்லை' என்று குற்றம் சாட்டினர்.
இப்படியே பல ஆண்டுகளாக தாங்கள் ஏமாற்றம் அடைந்து வருவதாக வருத்தம் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் பட்டியலின மக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மத்திய அரசின் புள்ளி விவரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் செங்கோட்டையன்!