கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், 'கரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து இருந்தால், இந்த அளவு பாதிப்போ, உயிரிழப்போ ஏற்பட்டிருக்காது. ஊரடங்கு நீக்கப்பட்டால் பாதிக்கப்படும் மக்களைப் பற்றி மத்திய, மாநில அரசுகளுக்கு கவலை இல்லை. மத்திய அரசு இதுவரை ஒரு பைசா கூட மக்களுக்குத் தரவில்லை. ஊரடங்கினால் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாநில அரசு ஐந்தாயிரம் ரூபாயும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசு ஏழாயிரத்து ஐநூறு ரூபாயும் நிவாரணம் வழங்க வேண்டும்.
நெருக்கடி சூழலைப் பயன்படுத்தி எதேச்சை அதிகாரம் கொண்ட அவசர சட்டங்களை மக்களுக்கு எதிராக, மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. மனுதர்ம கொள்கையை அமல்படுத்த பாஜக முயற்சி செய்கிறது. மின்சார வரைவு மசோதாவை ஏற்கமாட்டோம். அதுமட்டுமின்றி, இதை தமிழ்நாடு அரசு ஏற்க மாட்டோம் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். சுற்றுச்சூழல் அவசர சட்டம் விவசாயிகள், மக்களுக்கு எதிரானது. மத்திய அரசின் தவறான திட்டங்கள் தொடர்பாக ஜனநாயக ரீதியாக கருத்து சொல்ல முடியவில்லை. கருத்து சொல்பவர்கள் மிரட்டப்படுகிறார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம், மூத்த தலைவர் நல்லகண்ணு குறித்து விரிவான விமர்சனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஆயிரக்கணக்கில் புகார் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெரியார் சிலை அவமதிப்பு, கட்சி அலுவலகம், தலைவர்கள் மீதான விமர்சனம் தொடர்பாக அதிமுக கட்சி சார்பிலோ அல்லது முதலமைச்சர், துணை முதலமைச்சர் சார்பிலோ, இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை.
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் சர்வாதிகாரி ஆட்சி நடைபெறுகிறது. அதற்கு அதிமுக அரசு துணை போகிறது' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...கலை அறிவியல் கல்லூரிகளில் வகுப்பு நேரம் மாற்றம்