தமிழ்நாட்டில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கோயம்புத்தூர் மாவட்டம் கரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இருந்தது. கடந்த 3ஆம் தேதி வெங்கிட்டாபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கும், கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த 31 வயது கர்ப்பிணி ஆகியோர் கரோனா பாதிப்பினால் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கர்ப்பிணி பெண்ணுக்கு, கடந்த 9 ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது. நேற்று வெங்கிட்டாபுரம் பகுதியைச் சேர்ந்த 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒவ்வொன்றாக குறைந்தது.
இன்று காலை அப்பெண் குணமடைந்து வீடு திரும்பினார். இதன் மூலம் கோயம்புத்தூர் மாவட்டம், கரோனா பாதிப்பில்லாத மாவட்டமாக மாறியுள்ளது. கோயம்புத்தூரில் 146 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 145 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இதில், கோவையைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் உயிரிழந்தார்.
இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 257 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, நீலகிரியைச் சேர்ந்த 4 பேர் மட்டும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேற்கு மண்டலத்தில், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்கள் கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
இதகுறித்து கோவை ஆட்சியர் ராசாமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், "கோவை மாவட்டம் கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த பத்து நாட்களாக யாருக்கும் கரோனா பாதிப்பில்லை. சுகாதார துறை, வருவாய் துறை உள்ளிட்ட துறையினரின் கூட்டு உழைப்பினால் இது சாத்தியமாகியுள்ளது. கரோனா பரவலை தடுக்க மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: நாய் கடித்து உயிருக்கு ஊசலாடிய நாகப்பாம்பு: அறுவை சிகிச்சை வெற்றி!