உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் கோவிட்-19 பெருந்தொற்று தமிழ்நாட்டில் இரண்டாம் கட்ட நிலை அடைந்திருக்கிறது. இதுவரை 1,372 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 15 பேர் உயிரிழந்தனர், 365 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என தமிழ்நாடு மக்கள் நலவாழ்வு குடும்பநலத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முழுமையான 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிகம் பாதிக்கப்பட்டதாக சிவப்பு குறியீடு மாவட்டங்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இதன் தாக்கத்தை தடுக்கும் நோக்கில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, சிவப்பு குறியீடு மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள கோவை மாவட்டத்தில் கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 280 பேர் கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் கோவை இ.எஸ்.ஐ அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பிற்குள் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சிகிச்சைப் பெற்றுவந்தவர்களின் கோவையை சேர்ந்த 10 பேர், திருப்பூரைச் சேர்ந்த 9 பேர், நீலகிரியைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 23 பேர் நேற்று (ஏப்ரல் 18) ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அவர்கள் அனைவரையும் இ.எஸ்.ஐ மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா தலைமையிலான மருத்துவ ஊழியர்கள் கைதட்டி, பாராட்டி உற்சாகப்படுத்தி குணமடைந்தவர்களுக்கு அதற்குரிய பரிசோதனை சான்றிதழ் நகலை வழங்கி அரசு மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும், அடுத்துவரும் 28 நாள்கள் அவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பொது இடங்களுக்கு செல்லக் கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, “கோவையில் கரோனா தடுப்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. தற்போது இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இருந்து 23 பேர் பூரணமாக குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் உடன் தொடர்பில் இருந்ததாக 2,025 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் மூன்று பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இ.எஸ்.ஐ மருத்துவமனையை பொறுத்தவரையில் அங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடனும் பயம் இல்லாமல் தயக்கம் இல்லாமல் பணியாற்றி வருகின்றனர் அவர்களது பணி பாராட்டத்தக்கது. கோவை மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அடுத்த பத்து நாட்களில் இந்த மருத்துவமனையில் இருந்து அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.” என தெரிவித்தார்.
முன்னதாக, கோவை இ.எஸ்.ஐ அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 127 பேரில் மருத்துவர், 10 மாத குழந்தை உள்ளிட்ட 14 பேர் கடந்த வாரம் குணமடைந்துள்ளனர். ஏப்ரல் 16 ஆம் தேதி 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது, அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருபவர்களும் விரைவில் வீடு திரும்புவார்கள் என்று மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவிக்கின்றது. கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பலரும் தொடர்ந்து குணமடைந்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் கரோனா நோய்த்தொற்று மீதான பீதி குறைந்து வருகிறது.
இதையும் படிங்க : 'கரோனா பரிசோதனை உபகரணங்கள் வழங்க மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது'