கோவை: கரோனாவால் இரு ஆண்டுகளாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்து காணப்பட்ட நிலையில், 2023ஐ ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் பொது மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். கோவை மாவட்டத்தில் வாண வேடிக்கையுடன் பொது மக்கள் புத்தாண்டை கொண்டாடினர்.
குறிப்பாக கோவை புறநகர் பகுதிகளில் உள்ள பிரபல ஹோட்டல்கள் உட்பட பெரும்பாலான இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டின. செண்டை மேளங்கள் முழங்க புத்தாண்டை பொதுமக்கள் வரவேற்றனர்.
நீலாம்பூர் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் நள்ளிரவில் செண்டை மேளம் அடித்து ஆட்டம் பாட்டம் என பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரு ஆண்டுகளாக கரோனா தொற்றின் தாக்கம் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகம் இல்லாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு உற்சாகத்துடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என உற்சாகத்துடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கோவை மக்கள் திளைத்தனர். இதேபோன்று உக்கடம் - வாலாங்குளம் பகுதியில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் உள்ளிட்டோர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
நள்ளிரவு 12 மணி அளவில் குளக்கரையில் வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. அப்போது ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி கோவை மாநகரில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வாகனங்கள் அதிக வேகமாக இயக்கத் தடை விதிக்கப்பட்டன. மேம்பாலங்களில் இரவு நேரத்தில் வாகனங்கள் இயக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் லேசான தடியடி