கரோனா தீநுண்மி காரணமாக உலகம் முழுவதும் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தத் தீநுண்மியைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல ஒன்றிணைந்து தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கோவிட்-19 என்ற இந்தக் கொடிய தீநுண்மியைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஐம்பது நாள்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருந்துவருகிறது.
இந்த நோயிலிருந்து தங்களைப் பாதுகாக்க கிருமி நாசினிகளைக் கொண்டு அடிக்கடி கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தல் என தொடர்ச்சியாகத் தற்காப்பு முயற்சிகளையும் மக்கள் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், கோவையிலுள்ள காருண்யா பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்பவியல் துறை மாணவர்களும், பேராசிரியர்களும் இணைந்து, புற ஊதாக் கதிர்கள் மூலம் தீநுண்மி, பாக்டீரியா, பூஞ்சை போன்ற கிருமிகளைச் செயலிழக்கச் செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பம் ஒன்றினை வடிவமைத்துள்ளனர்.
மைக்ரோ ஓவன் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பெட்டியில், வெளியிலிருந்து வாங்கி வரக்கூடிய காய்கறிகள், மளிகைப் பொருள்கள் போன்றவற்றை குறிப்பிட்ட நேரம் வைத்து எடுப்பதால், பொருள்களின் மேல்பரப்பில் படர்ந்துள்ள தீநுண்மி, நுண்ணுயிர்களை, இதில் உள்ள புற ஊதாக் கதிர்கள் செயலிழக்கச் செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உயிரி தொழில்நுட்பவியல் துறை பேராசிரியர் முத்துக்குமார் கூறுகையில், "கரோனா தீநுண்மி தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் இந்தப் பெட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெளியிலிருந்து வாங்கி வரும் பொருள்களை சுமார் 20 நிமிடம் இதில் வைப்பதால் பொருள்களின் மேல் பரப்பில் உள்ள கிருமிகள் செயலிழந்துவிடுகின்றன. இதனால் வெளியிலிருந்து வாங்கிவரக் கூடிய பொருள்களின் மூலம் பரவக்கூடிய நோய்த்தொற்று தடுக்கப்படுகிறது" என்றார்.
இந்தப் பெட்டி குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சோதனைகள் அடிப்படையில் பெட்டியில் சில மாற்றங்கள் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பல்கலைக்கழகத்தின் சார்பாக முயன்றுவருவதாகவும் பேராசிரியர் முத்துக்குமார் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நோய்த் தடுப்புத்துறை முன்னாள் இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி சிறப்பு நேர்காணல்...!