கோவை : அன்னூர் ஒட்டர்பாளையத்தில் கடந்த 6ஆம் தேதி விவசாயி கோபால்சாமி தனது வேளாண் நிலத்திற்குப் பட்டா வழங்கக்கோரி கிராம நிர்வாக அலுவலகம் சென்றபோது கிராம நிர்வாக அலுவலருக்கும், கோபால்சாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அங்கு இருந்த கிராம உதவியாளர் முத்துச்சாமி கோபால்சாமியைத் தாக்கினார். பின்னர் சிறிது நேரத்தில் முத்துச்சாமி கோபால்சாமியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். இந்தச் சம்பவத்தை அங்கிருந்த நபர் ஒருவர் செல்போனில் காணொலியாக எடுத்து எடிட் செய்து வெளியிட்டார்.
மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு
முதலில் கோபால்சாமியின் காலில் முத்துச்சாமி விழும் காட்சி மட்டும் வெளியானது. இதன் அடிப்படையில் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு கோபால்சாமி மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்பட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதன் பின்னர் சில நாள்களில் மற்றொரு காணொலி காட்சி வெளியானது. அதில் முத்துச்சாமி, கோபால்சாமியை ஆபாசமாகத் திட்டியபடி தாக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய அலுவலர்கள் உண்மைத் தகவலை மறைத்த கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, முத்துச்சாமி ஆகியோரைப் பணியிடை நீக்கம்செய்தனர்.
மேலும் கோபால்சாமி கொடுத்த புகாரின்பேரில் முத்துச்சாமி மீதும், கலைச்செல்வி மீதும் ஆபாசமாகப் பேசுதல், காயத்தை ஏற்படுத்துதல், குற்றம் செய்யத் தூண்டுதல் ஆகிய மூன்று பிரிவுகளில் அன்னூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
கலைச்செல்வி, முத்துச்சாமி கைது
இந்நிலையில் கலைச்செல்வி, முத்துச்சாமி ஆகிய இருவரையும் கைதுசெய்த காவல் துறையினர் அவர்கள் இருவரையும் காவல் நிலைய பிணையில் விடுவித்தனர். மேலும், இந்தச் சம்பவங்களை செல்போனில் பதிவுசெய்து, அவற்றை எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி பதற்றத்தை ஏற்படுத்திய நபர் மீதும் அன்னூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோபால்சாமி மீது போடப்பட்ட பொய் வழக்கைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.