கோவை மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.புரம் மைதானத்தில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி மாலை பாஜக தேசியத் தலைவர்களில் ஒருவரான அத்வானி பேச வந்திருந்தார்.
தொடர் குண்டுவெடிப்பு: 50-க்கும் மேற்பட்டோர் சாவு
அவர் பேச இருந்த மேடைக்கு அருகில் ஆரம்பித்து, கிட்டத்தட்ட 12 கி.மீ. தொலைவுக்குள் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கிட்டத்தட்ட சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதில் உச்சபட்ச கொடூரம் என்னவென்றால், மக்கள் நோய் தீர்க்கவரும் மருத்துவமனை வளாகத்திலேயே குண்டுகள் வெடித்து பலர் பலியாகினர்.
குண்டுவெடிப்பின் பின்னணி என்ன?
1997 நவம்பரில் நடந்த காவலர் செல்வராஜ் கொலை, அதனைத்தொடர்ந்து நடைபெற்ற கலவரச்சூழலில் 19 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்.
அதில் காவல் துறையினர் மெத்தனப்போக்கு காட்டியதே, இஸ்லாமிய அமைப்புகளில் ஓரிரு பிரிவினர் ஆவேசத்தின் காரணமாக குண்டுவெடிப்பு சூழலை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற உடனே இதற்குக் காரணமானவர்கள் யார் என்பதை அறிந்து அவர்களை காவல் துறையினர் உடனடியாக கைது செய்து துரித நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
மேலும் பதுக்கப்பட்ட குண்டுகள், வெடிக்கத் தயாராக இருந்த குண்டுகள் கைப்பற்றப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டன.
சோக சம்பவத்தின் 21-வது நினைவுதினம்
அந்த சோக சம்பவத்தின் 21-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவையில் 1500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்துநிலையம், ரயில் நிலையம் பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.