கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே கரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்களைக் கண்காணிப்பதற்கு என தனிமைப்படுத்தப்பட்ட தனியார் கல்லூரி வளாக கட்டடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி நேரில் ஆய்வுசெய்தார்.
இதுகுறித்து ஆட்சியர் கூறுகையில், "கோவை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன. தமிழ்நாடு அரசு சார்பில் விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
கோவை விமான நிலையத்தில் சுகாதாரத் துறையினர் ஆறு குழுக்களாகப் பிரிந்து 24 மணி நேரமும் பணியில் உள்ளனர். சளி, இருமல் போன்றவைகள் இருந்தால் பரிசோதனை செய்யவும், சிகிச்சை அளிக்கவும் அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரோனா அறிகுறியுடன் 10 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 10 பேரின் அறிக்கையும் கோவிட்-19 தொற்று இல்லை என வந்துள்ளது. அதேபோல் விமானம் மூலம் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் வந்தால் அவர்களை அனுமதித்து, கண்காணிக்க 200 படுக்கைகள் கொண்ட கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து கரோனா கண்காணிப்பு மைய வளாகத்திலிருந்து வெளியே வந்தபோது மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை, வினோபாஜி நகர் பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கண்காணிப்பு மையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்றும், அப்பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகள், தொழில் கூடங்கள், கல்வி மையங்கள் இருப்பதாகத் தெரிவித்தனர்.
மேலும், இந்த மையம் வருவது அச்சமாக இருப்பதால் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். போராட்டம் நடத்திய மக்களிடம் ஆட்சியர், அலுவலர்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியபின் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இதையும் படிங்க:மருந்தகங்களில் முகக்கவசங்கள் அதிக விலைக்கு விற்பதாகப் புகார்