கோவை : சூலூர் பகுதியில் வடக்கு, தெற்கு என இரண்டு பிரிவுகளாக இளைஞர்கள் ஒன்றிணைந்து கால்பந்து விளையாடி வருகின்றனர். கடந்த மூன்று வருடங்களாக கால்பந்து விளையாட்டில் இளைஞர்களுக்கு இடையே மோதல்கள் இருந்து வந்துள்ளன.
இந்நிலையில் சூலூர் தெற்கு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (24). இவரை, வடக்கு பகுதியைச் சேர்ந்த ரமேஷ், சம்பத், நாகராஜ், தினேஷ் ஆகியோர் கடந்த மாதம் சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர். இது தொடர்பாக சந்தோஷ் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் நான்கு பேரும் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் மூன்று பேருக்கு மட்டும் முன்ஜாமீன் கிடைத்த நிலையில் ஒருவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை சந்தோஷ் தனது நண்பர் தினேஷூடன் சூலூர் பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டு இருந்துள்ளனர். இதையறிந்த ரமேஷ், அவரது நண்பர்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட கும்பல் மீண்டும் சந்தோஷ் மற்றும் தினேஷை கல், கட்டையால் சரமாரியாகத் தாக்கி பாட்டிலை உடைத்து தினேஷைக் குத்தி கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அடி தாங்க முடியாத சந்தோஷ் மற்றும் தினேஷ் தப்பித்தால் போதும் என ஓடி அருகிலிருந்த பிரபல ஜவுளிக் கடைக்குள் தஞ்சமடைந்தனர்.
பின்னர், அருகிலிருந்தவர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி சுவீட் ராஸ்கல்ஸ் கால்பந்து அணியைச் சேர்ந்த ஒன்பது பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க : பெட்ரோலை துரத்தும் டீசல்.. 100-ஐ தாண்டிய அவலம்.. விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்..!