தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனை உடனடியாக ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு கட்சியினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் தொடர் போராட்டம் நடத்த இடதுசாரிக் கட்சிகள் முடிவெடுத்துள்ளனர். இது குறித்த கூட்டமானது கோவை சிபிஎம் மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் சிபிஐ மாவட்டச் செயலாளர் சுந்தரம், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் பத்மநாபன், சிபிஎம் நிர்வாகிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் இலக்கியன் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்ற 28ஆம் தேதிமுதல் 30ஆம் தேதிவரை கோவையில் 30 மையங்களில் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.
அதன்படி 28ஆம் தேதி என்று வால்பாறை, ஆனைமலை, கோட்டூர், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மலுமிச்சம்பட்டி, மதுக்கரை, தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், அன்னூர், எஸ்.எஸ்.குளம், சூலூர், சின்னியம்பாளையம், கருமத்தம்பட்டி, சுல்தான்பேட்டை ஆகிய மையங்களிலும் அதனைத் தொடர்ந்து 29ஆம் தேதி குனியமுத்தூர், துடியலூர், சிவானந்தபுரம், ஒண்டிபுதூர், ஆவாரம்பாளையம், புலியகுளம், சித்தாபுதூர், காந்திபார்க், பிஎன் புதூர் ரத்தினபுரி, கணபதி ஆகிய மையங்களிலும் முப்பதாம் தேதி அன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மத்திய தபால் தந்தி அலுவலகம் முன்பு என போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளும் ஊழியர்கள் நோய்த்தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும், ஆர்ப்பாட்டத்தின்போது தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.