கோயம்புத்தூர்: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் கோவை மாவட்டம் சூலூரில் தங்கி, அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் நேற்று (டிச.22) இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பரோட்டா சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து தனது அறைக்குச் சென்ற மாணவர் ஹேமச்சந்திரன், இன்று (டிச.22) காலை அசைவின்றி இருந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹேமச்சந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மாணவர் உயிரிழப்பு குறித்து சூலூர் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், மாணவரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மாணவருக்கு பரோட்டா சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும் பிரச்சினை இருந்ததாகவும், அதிக காய்ச்சலில் இருந்தபோது பரோட்டா உட்கொண்டதால் அதுவே உயிரிழப்புக்கு காரணமாக மாறியதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: நீலகிரியில் வனவிலங்குகள் அட்டகாசம் அதிகரிப்பு! புலி தாக்கி 3 பெண்கள் படுகாயம்..!