உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நிகழ்வானது நடைபெற்றது. நள்ளிரவு 12 மணியளவில் நடைபெற்ற இந்த திருப்பலி நிகழ்வில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக தேவாலயத்திற்கு வந்தவர்களுக்கு கிருமி நாசினி கையில் தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்ட பின்னரே தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்திய தேவாலய நிர்வாகம், அவர்களை தனிமனித இடைவெளியுடன் அமர வைத்தது.
இதனை தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் சிறப்பு திருப்பலி நிகழ்வானது நடைபெற்றது. கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் ஆக்வினஸ் இந்த சிறப்புத் திருப்பலியை துவக்கி வைத்தார். குழந்தை இயேசு பொம்மையை அனைவரிடமும் தூக்கி காட்டிய ஆயர், குழந்தை ஏசு பிறப்பை அறிவித்து அதனை கொண்டு சென்று குடிலில் வைத்தார். பின் ஆராதனைகள், சிறப்புத் திருப்பலி நிகழ்வுகளை ஆயர் தாமஸ் ஆக்வினாஸ் நடத்தினார்.
மேலும், கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் நலமடையவும், கரோனா தொற்றால் இனிமேல் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காவும் இன்றைய தினம் பிராத்தனை செய்து இருப்பதாகவும் ஆயர் தாமஸ் அக்வினாஸ் தெரிவித்தார். இந்த முறை வழக்கமான கொண்டாட்டம் சற்று குறைவாக இருந்தாலும் நள்ளிரவு சிறப்பு ஆராதனை, திருப்பலி நிகழ்வுகளுக்கு அரசு அனுமதி அளித்து இருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தேவாலயத்திற்கு வந்த கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க...கேட்பாரற்று கிடக்கும் வரலாற்றுச் சின்னமான ‘ஆயி மண்டபம்’ : கண்டுக்கொள்ளுமா அரசு!