கோயம்புத்தூர்: ஆலாந்துறை யூனியன் பள்ளி வீதியைச் சேர்ந்தவர் சூர்யகுமார். இவரது மகன் சந்ரு (11). இவர் ஆலாந்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளியில் தலைமை ஆசிரியர் அலுவலம் அருகே உள்ள சுவரில் இருந்த தேனீ கூட்டை அகற்ற, அங்கு படிக்கும் 7ஆம் வகுப்பு மாணவர்களான சந்ரு, சூர்யா, சக்திவேல் ஆகிய மூன்று மாணவர்களை தலைமை ஆசிரியர் பழனிச்சாமி அழைத்ததாக கூறப்படுகிறது.
அதன் பின்னர், மாணவர் சந்ரு கிருமிநாசினியைக் கொண்டு நெருப்பு பந்தத்தை பற்ற வைத்து, தேன் கூட்டை அகற்ற முயன்றபோது, எதிர்பாராத விதமாக கிருமி நாசினி கேன் மற்றும் மாணவர் சந்ருவின் சீருடையில் தீப்பிடித்துள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்துள்ளனர். ஆனால் மாணவர் சந்ருவின் உடலில் 15 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மாணவர் சந்ரு மீட்கப்பட்டு, உடனடியாக அருகே உள்ள ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி செய்யப்பட்டு, பின் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பின்னர், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிச்சாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.