Rowdy Baby Surya: பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கணவன், மனைவி யூ-ட்யூப் சேனல் நடத்திவருகின்றனர். இவர்களது 10 வயது மகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு, ஆன்லைன் மூலம் பாடங்கள் பயில்வதில் உள்ள பிரச்சினைகள் குறித்து, காணொலியாக தனது யூ-ட்யூப் பக்கத்தில் வெளியிட்டனர்.
இந்தக் காணொலிக்குப் பின்னூட்டம் (கமெண்ட்) செய்த ரவுடி பேபி சூர்யா, அந்தக் குடும்பத்தை அவதூறான சொற்களால் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், தம்பதியின் செல்போன் எண்களை தனது எண் எனக் கூறி அந்தக் காணொலி கமெண்ட்டில் பதிவிட்டுள்ளார். இதனால் பலரும் அத்தம்பதியை அழைத்து, சூர்யா என நினைத்து மோசமான சொற்களால் பேசி மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து கோவை மாவட்ட சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அப்புகாரில் பேரில், மதுரையில் தங்கியிருந்த ரவுடி பேபி சூர்யா, அவரது நண்பர் சிக்கா ஆகிய இருவரையும் இன்று (ஜனவரி 4) காலை கைதுசெய்தனர்.
அவர்கள் மீது பெண் வன்கொடுமைச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்பட ஏழு (294b, 354A, 354D, 509, 109, 66D, 67 IT ACT 2000) பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களது யூ-ட்யூப் சேனலை முடக்குவதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சிறுமியை நாய் கடித்த விவகாரம்: உரிமையாளர் கைது