கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி- சோமனூர் சாலையில் யூனியன் வங்கி ஏடிஎம் ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த ஏடிஎம்மிற்கு நேற்று (டிச.21) மாலை வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை உடைத்துவிட்டு, ஏடிஎம்மில் இருந்து பணத்தை திருட முயற்சித்தார்.
அப்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த அலாரம் மூலம் சம்பந்தப்பட்ட ஏஎடிஎம்யின் வங்கி மேலாளருக்குத் தகவல் சென்றது. அதையடுத்து வங்கி அலுவலர்கள் ஏடிஎம் மையத்திற்கு விரைந்தனர். அவர்கள் வருவதற்கு முன்பாக, அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதைத்தொடர்ந்து அங்கு பதிவான சிசிடிவி காட்சியைக்கொண்டு கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு வங்கி அலுவலர்கள் தகவல் அளித்தனர். புகாரின்பேரில் காவல்துறையினர் திருடனை தேடிவந்த நிலையில் கருமத்தம்பட்டி நான்கு ரோடு சந்திப்பில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் சுற்றுவதாகத் தகவல் கிடைத்தது.
உடனே அங்குச் சென்ற காவல்துறையினர் அந்த நபரை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டுவந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்நபரின் பெயர் சர்ஜன் பாஸ்வான் என்பதும், அவர் பிகார் மாநிலம் சித்தமார்க்கி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இவர், கடந்த இரண்டு மாதங்களாக கருமத்தம்பட்டியை அடுத்த காடுவெட்டி பாளையம் பகுதியில் உள்ள தொழிற்சாலை உணவகத்தில் பணியாற்றி வந்ததும், நேற்று(டிச.21) மதுபோதையில் இருந்த அவர் கையில் பணம் இல்லாததால் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணத்தை திருட முயற்சி செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த கருமத்தம்பட்டி காவல்துறையினர், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி அவிநாசி கிளைச் சிறையில் சர்ஜன் பாஸ்வானை அடைத்தனர்.
இதையும் படிங்க... மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு