கோயம்புத்தூர்: காலை முதல் மாலை வரை மில்லில் அயராது பணி. மாலைக்கு மேல் தினமும் இரண்டு மணி நேரம் கல்லூரி படிப்பு. இப்படியாக தான் நகர்ந்து வருகிறது கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மில். இங்கு தங்களது குடும்பத்தின் நிதிச் சுமையைப் போக்க பள்ளிப் படிப்பிற்குப் பின் பலரும் இந்த கோவையில் உள்ள பிரபல மில்லில் பணிக்கு சேர்ந்துள்ளனர்.
21 ஆம் நூற்றாண்டிலும் நமது குழந்தைகளுக்கு கல்வி இல்லையென்றால் என்ன ஆகும் இந்த சமூகம் என்று நினைத்த இந்நிறுவனம், பணிபுரியும் மாணவப்பருவ பெண்களுக்கு கல்வியை வழங்கி வருகிறது. அதிலும், பிரபலமான இந்த மில்லில் பெண் கல்வியியல் என்ற தனிப்பிரிவும், அதில் 65 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மில்லில் இயங்கி வரும் இந்த பெண் கல்வியியல் பிரிவில், இதுவரை 31,000 க்கும் மேற்பட்ட மாணவிகள் திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் கீழ் பட்டம் பெற்றுள்ளனர். மில் தொழிலாளிகளாக வரும் மாணவிகள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைத்து பணியிலும் அமர்ந்துள்ளனர்.
இந்நிலையில், நடப்பாண்டு நடைபெற்ற திறந்தநிலை பல்கலைக் கழகத்திற்கான பட்டமளிப்பு விழாவில், இதே மில்லில் பகுதி நேரமாக பணிபுரிந்து பட்டம் பெற்றவர்களில் 8 தனித்தனிப் பிரிவுகளில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளனர். C. ப்ரீத்தி (B.A. Tamil), V. புவனேஸ்வரி ( BCA), V. தனலட்சுமி ( B.Com), சத்யா ( B.Com CA ), V.இலக்கியா ( B.Com CA ), V.ஹேமலதா ( B.Com CA ), K. சாவித்ரி ( BBA), M. நிவேதா ( BCA) ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.
குறிப்பாக BCA பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற நிவேதா என்ற மாணவிக்கு "CEMCA" (சிம்கா) என்ற விருதும் கிடைத்துள்ளது. கடந்த மே 29 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர். என். ரவி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கினர்.
இது குறித்து மாணவி நிவேதா கூறுகையில், “குடும்ப நிதிச் சுமை காரணமாக பள்ளிப் படிப்பிற்குப் பிறகு உயர்கல்வி கிடைக்காது என்று நினைத்தேன். ஆனால், வேலைவாய்ப்புடன் கல்வியும் கிடைத்தது. இதனால், தற்போது தங்கப் பதக்கத்துடன் விருதையும் வென்றுள்ளேன். இதன்மூலம் என்னுடைய பெற்றோருக்கு பெருமை சேர்த்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து இந்தச் சாதனை குறித்து மில்லில் உள்ள பகுதிநேர கல்லூரியின் முதல்வர் சரவணப்பாண்டி கூறுகையில், “திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெயரளவில் பதிவு செய்துவிட்டு தேர்வு எழுதாமல், முழு அர்ப்பணிப்புடன் கல்வியில் நாட்டம் செலுத்தியதன் பலனாகத்தான் மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் தங்கம் வென்றுள்ளனர்” எனக் கூறினார்.
இவ்வாறு பணிமுடிந்த கையோடு, கல்வியை அர்ப்பணிப்புடன் கற்று எட்டாக்கனி என்று எண்ணிய கல்வியில் தங்கப்பதக்கம் பெற்ற இந்த மாணவிகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: இதுதான் பச்சையாப்பாசின் ரியல் மாஸ்..!- பதக்கம் பெற்ற மாணவன்