கோவை மாவட்டம் வடவள்ளி அடுத்த மருதமலைப் பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் அருகேயுள்ள சோமயம் பாளையம், மருதமலை அடிவாரம், கணுவாய், ஆகியப் பகுதிகளுக்கு வருவது வழக்கம். அவ்வாறு வரும் யானைகள் ஊருக்குள் புகுந்து அருகிலுள்ள வனப்பகுதிக்குச் செல்வது தொடர்ந்தவண்ணம் உள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு மருதமலை அடிவாரப் பகுதியில் தாய் யானை, குட்டி யானை ஊருக்குள் புகுந்தன. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த யானைகள் மருதமலை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டன.
முன்னதாக அதிகாலையில் ஐஓபி காலனி குடியிருப்பு பகுதிக்குள் இந்த இரண்டு யானைகள் சர்வ சாதாரணமாக நடந்து வந்ததும், வீடு ஒன்றின் காம்பவுண்ட் சுவர் அருகே மேய்ச்சலில் ஈடுபட்டு பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றதும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில நாள்களாக யானை நடமாட்டம் அதிகமாக உள்ளதாகவும், யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் போதே அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: சிறுமுகையில் உயிருக்கு போராடிய யானை - பத்திரமாக மீட்ட வனத்துறை