கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, நரசிபுரம் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பிரதான தொழிலாக இருப்பது விவசாயம். இங்கு விளைவிக்கக்கூடிய காய்கறிகள், சின்ன வெங்காயம் ஆகியவை கோவை, அண்டை மாநிலமான கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 60 நாள் குறுவை பயிரான சின்ன வெங்காயம் தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் சுமார் மூவாயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதனை அறுவடை செய்ய வெளி மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய தொழிலாளர்களுக்கு இ-பாஸ் கிடைக்காததால் அறுவடை செய்யும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்கியதால், இந்தப் பயிர்கள் அனைத்தும் வீணாய் போகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக உழவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நரசிபுரம் பகுதியைச் சேர்ந்த உழவர் ஜெயராம், "எங்கள் பகுதியில் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் ஏக்கர் வரை சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பயிர் அறுவடைக்கு தயாராகியுள்ள நிலையில் கரோனா தொற்று காரணமாக அறுவடைக்காக திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் பகுதிகளில் இருந்து வரக்கூடிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு இ- பாஸ் கிடைக்காததால் அவர்கள் வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கால தாமதமாக தொடங்கியுள்ள மழை காரணமாக இந்தப் பயிர்கள் அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அரசு இதில் கவனம் செலுத்தி தொழிலாளர்கள் அறுவடைக்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா பிரச்னையால் கடந்த சில மாதங்களாக விளைவிக்கப்பட்ட காய்கறிகளை சந்தைப்படுத்த முடியாமல் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். சின்ன வெங்காயம் அறுவடை செய்ய முடியாமல் போனால் வெங்காயத்தின் விலை மூன்று மடங்கு வரை விலை உயரக்கூடும். கடந்த ஆண்டு 200 ரூபாய் வரை விற்ற வெங்காயத்தின் விலை இந்த ஆண்டு 300 ரூபாய் வரை உயர வாய்ப்பு உள்ளது" என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் பழனிச்சாமி கூறுகையில், "வெளிமாவட்ட தொழிலாளர்கள்தான் இந்த வெங்காய அறுவடையில் ஈடுபட்டுவருகின்றனர். தற்போது கரோனா பிரச்னை காரணமாக அவர்கள் இங்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம். மேலும் அவர்கள் வந்து செல்ல பாஸ் வழங்க வேண்டும். அவர்கள் வந்தால் மட்டுமே குறிப்பிட்ட காலத்தில் வெங்காயத்தை அறுவடை செய்யமுடியும். ஏற்கனவே பல பிரச்னைகளை சந்தித்த விவசாயிகள் தற்போது பெரிய அளவில் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க... கொளுத்தும் வெயிலில் விவசாயிகள் வேர்க்கடலை அறுவடை