கோவை: கிணத்துக்கடவு அருகே உள்ள பொட்டையாண்டிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தனியார் தோட்டத்துக்கு அருகில் சிக்கலாம்பாளையம் சேர்ந்த சுரேஷ்குமார் நடத்தும் கல்குவாரியிலிருந்து கடந்த சில மாதங்கள் முன்பு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கேரளாவுக்குக் கடத்தப்பட்டு வந்தன.
அருகில் இருக்கும் விவசாயி காளிமுத்து கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் குவாரிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தார். இதனையடுத்து குவாரி செயல்படாமல் இருக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கனிமவள அதிகாரிகள், தாசில்தார் கடந்த வாரம் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் குவாரியில் பணியில் ஈடுபட்ட நான்கு பேர் மூலம் நேற்றும், இன்றும் 50 குழிகள் எடுக்கப்பட்டு, அதிக சக்தி வாய்ந்த குண்டுகள் வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். இதனால் விவசாய நிலத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். விவசாய நிலத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் போது கல்குவாரியில் வெடி வெடித்துத் தூக்கி வீசப்படும் கற்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து நிலவுவதாகவும், இதனால் அச்சத்துடனே வேலையில் ஈடுபடுவதாகவும் விவசாயத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், விவசாய நிலத்தில் அருகில் அத்துமீறி செயல்படும் கல்குவாரியில் வெடிவெடிக்கும் போது தூக்கி வீசப்படும் கற்களால் ஆபத்து நிலவுவதாகவும், அதனால் ஏற்படும் புகை, புழுதி படிவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் விவசாயி தெரிவித்தார். மேலும் விவசாய தோட்டத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, அருகில் உள்ள கல்குவாரியில் அத்துமீறிச் செய்யப்படும் நடவடிக்கைகளைப் பதிவு செய்து வருவதாகவும் விவசாயி சிவபிரகாஷ் தெரிவித்தார். இந்நிலையில் இதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஈடிவி பாரத் செய்தியாளர் குவாரி உள்ளே வீடியோ எடுக்கச் சென்றபோது மர்மநபர் ஒருவர் மிரட்டல் விடுத்த காட்சியும் அதில் பதிவாகியுள்ளது.