கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சி 97வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் நிவேதா தொடர்ந்து மூன்று மாநகராட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளாத காரணங்களால் தகுதி இழக்கிறார். மாநகராட்சிகளில் மாமன்ற உறுப்பினர்களின் கூட்டங்கள், மாநகராட்சி நிர்வாகத்தின் அறிவிப்பின்படி ஜனவரி, மார்ச், மே ஆகிய மாதங்களில் நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து மூன்று மாநகராட்சி கூட்டங்களில் பங்கேற்கவில்லை எனில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 32(1)இன் படி உள்ளாட்சி பதவி பறிபோகும்.
பின் அடுத்த கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 32(4) இன் படி சம்பந்தப்பட்ட நபர் கூட்டங்களில் பங்கேற்காதது குறித்து காரணம் ஏதாவது தெரிவித்து இருந்தால் மாநகராட்சி ஆணையாளர் அதனை வெளியிடுவார். அக்காரணத்தைத் தொடர்ந்து தகுதி இழந்தவர்கள் மீண்டும் தொடர்வது குறித்து மாமன்ற கூட்டம் முடிவு செய்யும்.
இதையும் படிங்க: கருணாநிதி பிறந்தநாள்: அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பான செய்தி!
இந்நிலையில், கோவை மாநகராட்சி 97வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் நிவேதா கடந்த ஜனவரி, மார்ச், மே ஆகிய மூன்று மாதங்களில் நடைபெற்ற மாமன்ற கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்காமல் இருந்துள்ளார். இதனால் அவர் நேற்று (மே 15) முதல் தகுதி இழப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டு, நிவேதா காரணம் ஏதாவது தெரிவித்தால் அதனை மாநகராட்சி ஆணையாளர் அடுத்த கூட்டத்தில் வெளியிடுவார். அதனையடுத்து அவர் மீண்டும் பதவியில் தொடர்வது குறித்து மாமன்ற கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். நிவேதா கோவை மாநகராட்சி மன்ற உறுப்பினர்களிலேயே இளம் பெண் மாமன்ற உறுப்பினர் என்பதும், இவர் முன்னாள் திமுக கோவை கிழக்கு மாவட்டச் செயலாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: K- store: ரேஷன் கடைகள் கே-ஸ்டோர்களாக மாற்றம் - கேரள அரசின் ஹைடெக் திட்டம்!