கோவை மாவட்டம் தடாகம், வீரபாண்டி, சோமையம்பாளையம், பன்னிமடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இந்த செங்கல் சூளைகளுக்காக மண் எடுப்பதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக, அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாகப் புகார் தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் செங்கல் சூளை உரிமையாளர்கள் உடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் அரசு அனுமதித்துள்ள அளவுக்கு மட்டுமே செம்மண் வெட்டி எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் விதிமுறையை மீறி மண் வெட்டி எடுத்த செங்கல் சூளைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இராசாமணி 141 செங்கல் சூளைக்கு அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,' சட்டம் 1957 பிரிவு 4ல் (1) உரிய அனுமதியின்றி கனிமங்கள் வெட்டி எடுப்பதும் பிரிவு 4 (1-ஏ) உரிய அனுமதியின்றி கனிமங்கள் எடுத்து செல்வதும், இருப்பு வைப்பதும் குற்றமாகும். மேலும் தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959 விதி 19-2 படி செங்கல் தயாரிக்கும் ஆலைகளுக்கு மண் எடுப்பதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற படிவம் 1 இணைப்பு 4-ஏ படி பதிவு சான்றிதழ் இணைத்து உரிய விண்ணப்ப கட்டணம், மற்றும் ஆண்டு செங்கல் கனிம கட்டணம் ஆகியவற்றை சலான் மூலம் செலுத்தி விண்ணப்பம் செய்து அங்கீகரிக்கப்பட்ட சுரங்க திட்டம், மாநில சுற்றுச்சூழல் தக்க மதிப்பீட்டு அமைப்பின் இசைவு மதிப்பு, மலைப் பாதுகாப்பு குழுமத்தின் தடையின்மைச் சான்று மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இசைவு ஆகியவற்றை பெற்று சமர்ப்பித்து பதிவு சான்று மண் எடுக்கும் குவாரி அனுமதியும் தான் செங்கல் சூளை உற்பத்தியினைத் தொடங்க வேண்டும்.
குறிப்பிட்ட பகுதிகளில் இயங்கும் செங்கல் சூளைகள் அனுமதி பெறாமல் விதிமுறைகளை மீறி செம்மண் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதிக அளவில் செம்மண் சூளைகளில் இருப்பு வைத்து இருப்பது தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சூளைகளுக்கு இருப்பு வைக்க முறையான அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருப்பு வைக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட செங்கல் சூளைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் கோவை வடக்கு வட்டம், வீரபாண்டி கிராமத்தில் ஜே.பி சேம்பர் பிரிக்ஸ் என்ற பெயரில் இயங்கி வரும் செங்கல் சூளையை இயக்குவதற்கும் அதற்குத் தேவையான மண் வெட்டி எடுத்துச் சென்று இருப்பு வைப்பதற்கும்; முறையான அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை என்றும்; உடனடியாக செங்கல் சூளை உற்பத்தியை நிறுத்த வேண்டும். இதுவரை அனுமதி இன்றி செயல்பட்டதற்காக தற்போது நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின்படி ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதம் செங்கல் சூளை அதிபர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கோவையில் பிடிபட்டது 16 அடி ராஜநாகம்!