கோயம்புத்தூரில் மூன்றாவது நாளாக துப்புரவு பணியாளர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டம் தொடர்கிறது. கடந்த ஆறாம் தேதி அமைச்சர் வேலுமணி 321 பேருக்கு துப்புரவு பணியாளர் நியமன ஆணை வழங்கினார். இதை கண்டித்து கடந்த திங்கள் கிழமை முதல் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் போராட்டத்திலும், வேலை புறக்கணிப்பிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்தவகையில், இன்று கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் கூடிய ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். அவர்கள் தமிழ்நாடு அரசை கண்டித்தும் மாநகராட்சி அலுவலர்களை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துப்புரவு பணியாளர் ஜீவா, "செம்மொழி மாநாடு நடந்தபோது எங்களை நிரந்தர பணி ஆட்களாக்குவோம் என்று பணியில் எடுத்தனர்.
ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், படித்த பட்டதாரிகளுக்கு துப்புரவு பணியாளர் நியமன ஆணை வழங்கியது மிகவும் கண்டனத்திற்குரியது. தற்போது எடுக்கப்பட்டுள்ள 321 பேரும் இதுவரையிலும் துப்புரவு பணியாளர்களாக இருந்ததில்லை. இவர்கள் அரசியல்வாதிகளுக்கு வேண்டியவர்கள், உறவினர்கள், பணம் கொடுத்து பணிக்கு சேர்ந்தவர்கள்.
மோடி அரசு அங்குள்ள துப்புரவு பணியாளர்கள் அனைவரையும் நிரந்தர வேலை ஆட்களாக நியமனம் செய்துள்ளது. ஆனால் அதை தமிழ்நாடு அரசு ஏன் செய்யவில்லை. படித்த பட்டதாரிகளுக்கு துப்புரவுத் தொழிலாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது என்று செய்தித்தாள்களில் பெருமையாக வெளியிட்டால் மட்டும் போதாது.
அவர்கள் இந்தப் பணியை செய்வார்களா என்று ஆராய வேண்டும். நாங்களும் பல வருடங்களாக நிரந்தர பணி வழங்கப்படும் என்று எண்ணி எண்ணி ஏமாற்றம் அடைந்துகொண்டே இருக்கிறோம். இனியும் அரசு எங்களை நிரந்தர பணியாட்களாக நியமனம் செய்யவில்லை என்றால் தீ குளிப்போம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:இரண்டாவது நாளாக துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!