கோயம்புத்தூர்: தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வினா வங்கி புத்தகங்கள் கோவையில் வழங்கப்படும் தேதி மற்றும் இடம் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, வினா வங்கி புத்தகங்கள் வரும் டிச.26ஆம் தேதி முதல் கோவை ராஜ வீதியில் உள்ள துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்பட உள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான வினா வங்கி புத்தகங்கள், ராஜ வீதி பகுதியில் உள்ள அரசு துணி வணிகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் (கோ.து.வ.ச) வருகின்ற 26ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. வினா வங்கி புத்தகங்கள் தேவைப்படும் பள்ளி மாணவர்கள், பெற்றோருடனோ அல்லது பள்ளிகள் வாயிலாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் 10ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் புத்தகம் (தமிழ் வழி, ஆங்கில வழி) 120 ரூபாய், 10ம் வகுப்பு கணித தீர்வு புத்தகம் (ஆங்கில வழி) 175 ரூபாய், 12ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு புத்தகம் (தமிழ் வழி, ஆங்கில வழி) 160 ரூபாய், 12ஆம் வகுப்பு கணித தீர்வு புத்தகம் (தமிழ் வழி, ஆங்கில வழி) 160 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: எண்ணூர் எண்ணெய் கழிவு விவகாரம்.. பல்லுயிரிகளின் நலன் குறித்து ஆலோசிக்கப்படும் - ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன்