கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியில் மார்ச்25ஆம் தேதி மாலை காணாமல் போன 7 வயது சிறுமி, 26ஆம் தேதி காலையில் சடலமாக மீட்கப்பட்டார்.பிரேத பரிசோதனை அறிக்கையில் அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது. இச்சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதையடுத்து 14 தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். அப்பகுதியைச்சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு, 6 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், சிறுமியின் வீட்டையடுத்த சில வீடுகள் தள்ளி குடியிருந்தந்த சந்தோஷ் என்பவர் சம்பவம் நடந்த தினத்திலிருந்து தலைமறைவானதாகத் தெரியவந்ததையடுத்து, அவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டதையடுத்து, அவன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பாக இன்று அதிகாலை ஆஜர்படுத்தினர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமியை கொலை செய்த கொடூரன் சந்தோஷ்குமாரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அந்தக் குற்றவாளியை கோவை மத்திய சிறையில் காவல் துறையினர் அடைத்தனர்.