கோயம்புத்தூர்: உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரர் கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை (அக் 23) அதிகாலை, காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபின் என்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து, அவரது வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது, அங்கு வெடிபொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, 5 பேர் கொண்ட கும்பல் மர்ம பொருளை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதன் அடிப்படையில் உக்கடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், ஜிஎம் நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ், ஃபிரோஸ் இஸ்மாயில் மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில் உள்ளிட்ட ஐந்து நபர்களை உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், இவர்கள் நீதிபதி செந்தில் ராஜா முன் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர், இவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் (நவம்பர் 8 வரை) அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஐந்து பேரும் மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, பரிசோதனை முடிந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: கோவை கார் வெடித்து விபத்து வழக்கில் 5 பேர் கைது