கோவை மாவட்டத்திலிருந்து பொள்ளாச்சி, பாலக்காடு செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்வகையில் உக்கடம்முதல் ஆத்துப்பாலம்வரை ரூ.216 கோடி மதிப்பீட்டில் 1.47 கிலோமீட்டர் தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
இதற்காகத் தூண்கள் அமைக்கப்பட்டு கட்டுமான பணிகள் 50 விழுக்காடு நிறைவடைந்துள்ள நிலையில், காங்கிரீட் மூலம் மேம்பாலத்தின் மேல்தளம் அமைக்கும் பணியை மேற்கொண்டுவருகின்றனர்.
இதனிடையே, பாதுகாப்பு கருதி உக்கடத்திலிருந்து கட்டுமான பணி நடக்கும் பாலம் வழியாக, கரும்புக்கடைக்குச் செல்ல இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகன ஓட்டிகள், அந்த வழியைக் கடந்து செல்கின்றனர். வாகனங்கள் செல்ல மிகவும் குறுகலான பாதை மட்டுமே விடப்பட்டுள்ளது.
மேம்பாலம் பணிக்காகக் கட்டடத்தின் மேல் இறைக்கப்படும் நீரில் நனைந்தபடியே மக்கள் பயணிக்க வேண்டிய கட்டாயம் நிலவிவருகிறது. குழிகளில் தண்ணீர் நிரம்பி நிற்கிறது. அது தெரியாமல், வாகன ஓட்டிகள் வாகனத்துடன் பள்ளத்தில் தடுமாறி விழுகின்றனர்.
இருசக்கர வாகன பயணி ஒருவர் மேம்பாலத்தின் மீதிருந்து அருவிபோல கொட்டும் நீரில் நனைந்தபடியே மக்கள் செல்வதை 'கோவை உக்கடம் அருவி' என்ற பெயரில் தண்ணீர் விழுவதை அருவிபோல வர்ணிக்கும் திரைப்பட பாடலை நகைச்சுவையாக இணைத்து இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்தக் காணொலி வைரலாகிவருகிறது.
பார்ப்பதற்கு இந்தக் காணொலி காட்சி நகைச்சுவையாக இருந்தாலும் அதன் பின்னே பேராபத்து ஒளிந்திருப்பது அனைவரும் அறிந்ததே. கட்டுமான பணிகளுக்கிடையே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படுவது ஆபத்தானது.
தண்ணீரைப் போல கட்டுமான பொருள்கள் விழுந்தால் பெரும் விபத்து ஏற்படுவது நிச்சயம். ஆகவே நெடுஞ்சாலைத் துறையினர் தற்காலிக தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
இருசக்கர வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மக்கள் அனுபவிக்கும் இந்தத் தண்டனைக்கு தீர்வுகாண வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை - அச்சத்தில் மக்கள்