கோவை - திருச்சி சாலையிலுள்ள சுந்தரேச ஐயர் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி. இவர் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில், பிரபல தங்கநகைக் கடை ஒன்றில் நகை சேமிப்பு திட்டத்தில் தவணை முறையில் இவர் பணம் கட்டிவந்துள்ளார்.
தவணை முடிந்த நிலையில், நேற்று 38.896 கிராம் எடையிலான, 2 லட்சத்து 43ஆயிரத்து 617 ரூபாய் மதிப்புள்ள தங்க நகையை வாங்கியுள்ளார். இதையடுத்து பெங்களூர் செல்வதற்காக தனது அம்மாவுடன், இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது நகை வாங்கிய பையை செஞ்சிலுவைச் சங்கம் முன்பு தவறவிட்டுள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கோபு (37) சாலையில் கிடந்த தங்க நகை பையை எடுத்து, பந்தய சாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். தங்க நகை வாங்கிய பையிலிருந்த ரசீதில் காயத்திரியின் முகவரி, செல்போன் எண் ஆகியவை இருந்துள்ளன.
இதையடுத்து காவல் துறையினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், இன்று மாநகர காவல் ஆணையரிடமிருந்து, தங்க நகையை காயத்ரி குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். கஷ்டமான சூழலில் ஆட்டோ ஓட்டி வந்தாலும், தன்னுடைய பொருள் காணாமல் போயிருந்தால் எவ்வாறு கஷ்டப்படுவேன் என்பதை உணர்ந்ததால்தான், உடனடியாக நகையை காவல் துறையிடம் ஒப்படைத்ததாக கோபு தெரிவித்தார்.
வறுமையிலும் நேர்மையைக் கடைப்பிடித்த கோபுவின் இந்தச் செயலைப் பாராட்டி மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன் ஆகியோர் அவருக்குப் பரிசு வழங்கினர்.
இதையும் படிங்க: ஓலா, ஊபருக்கு எதிராக ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்!