கரோனா பரவலைத் தடுப்பதற்காக, அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் மக்கள், ஒரு மீட்டர் அளவில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியிருக்கின்றன.
எனினும், அதிகப்படியான மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் இதனை எப்போதும் கடைப்பிடிப்பது சாத்தியமற்ற ஒன்றாகும் என்ற கருத்தும் நிலவிவருகிறது.
இதனைக் கருத்தில்கொண்டு, மக்கள் கூட்டத்தைத் தவிர்க்க கோவை வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆப் டெவலப்பரான கார்த்தி (30), மினி ரோபோட் எனப்படும் சிறியவகை இயந்திரப் படிவம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
உலகில் எந்த மூலையிருந்தாலும், இந்தச் சிறியவகை இயந்திரப் படிவத்தை இயக்க ஒரு செல்போன் செயலி இருந்தால் போதும். கிட்டத்தட்ட 30 கிலோ எடையைத் தாங்கக்கூடிய அளவில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒரு ரிமோட் காரை இயக்குவதைப்போல, இந்தச் சிறியவகை இயந்திரப் படிவத்தைப் பயன்படுத்தி அருகில் இருக்கும் கடைக்குச் சென்று பொருள்களை வாங்கி வர முடியும்.
இதுமட்டுமில்லாமல், கரோனா நோயாளிகளின் அருகில் செல்லாமலேயே அவர்களுக்குத் தேவையான மருந்துப் பொருள்களை, இந்தச் சிறியவகை இயந்திரப் படிவம் உதவியால் கொடுக்க முடியும்.
இது குறித்து இதனை வடிவமைத்த கார்த்திக் கூறுகையில், ”இந்தச் சிறியவகை இயந்திரப் படிவத்தை மென்மேலும் மேம்படுத்தினால் வருங்காலத்தில் ராணுவம், காவல் துறை போன்ற துறைகளிலும் இதனைச் சிறப்பாகப் பயன்படுத்த முடியும்” என்கிறார் நம்பிக்கையுடன்.
அனைத்துத் தரப்பு மக்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்தகைய கண்டுபிடிப்புகளை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என்பதே இளைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க:14 வயது சிறுவன் உருவாக்கிய ‘ரோபோட்டிக் சானிடைசர்’