கோவை: கரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் மூடப்பட்ட சுற்றுலா தலங்கள், ஊரடங்கு தளர்வுகளைத் தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் பூங்கா 9 மாதங்களுக்கு பிறகு இன்று (டிசம்பர் 15) மீண்டும் திறக்கப்பட்டது.
வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு பூங்காவினை திறந்துவைத்தார். அப்போது பொதுப்பணித் துறை அலுவலர்கள், பொதுமக்கள் உடனிருந்தனர். உடல் வெப்பநிலையை சோதித்த பின்னரே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருவதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பூங்காவிற்கு வருபவர்களுக்கு முகக் கவசம் கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆழியார் பூங்கா, குரங்கு அருவி ஆகியவை நீண்ட நாட்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ளதால், தங்களது குடும்பத்தினருடன் வந்து நேரத்தை கழிப்பது மகிழ்ச்சியளிப்பதாக, பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: குற்றாலத்தில் குளிப்பதற்கான நேரத்தை நீட்டிக்க வாய்ப்பு - மாவட்ட ஆட்சியர் சமீரன்